கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டு உள்ளன. புயல் தொடர்ச்சியாக, ஹைதியில் 3 பேரும், டோமினிகன் குடியரசு நாட்டில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.
ஹைதியில் 2 பேர் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள். மற்றொருவர் மேரிகாட் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் சிக்கி பலியானார். இதனால், மெலிஸ்சா புயல் பாதிப்புகளால் ஹைதி மற்றும் டோமினிகன் குடியரசுவில் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். மற்றொருவரை காணவில்லை. அவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இந்த புயலானது மணிக்கு 5 கி.மீ. என்ற வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், வடக்கு கரீபியன் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஜமைக்கா மற்றும் ஹைதியின் தென்பகுதிகள் மற்றும் டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளில் நாள் முழுவதும் மழை பெய்தது. இதனால், பேரிழப்புகளை ஏற்படுத்த கூடிய வெள்ளமும் ஏற்படும் சாத்தியம் உள்ளது என தேசிய புயல் மையத்தின் துணை இயக்குநர் ஜேமீ ரோம் முன்னெச்சரிக்கையாக முன்பே கூறினார்.
இந்நிலையில், ஜமைக்காவில் 2 நூற்றாண்டுகளில் மிக சக்தி வாய்ந்த புயலாக மெலிஸ்சா புயல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புயல் ஜமைக்காவில் இன்று கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது, தெற்கே செயின்ட் எலிசபெத் பாரீஷ் பகுதிக்குள் நுழைந்து வடக்கே செயின்ட் ஆன் பாரீஷ் பகுதி வழியே வெளியேறும் என கணிக்கப்பட்டு உள்ளது.
எனினும், சில மணிநேரங்களுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் என அரசு தெரிவிக்கின்றது. புயலால் நிலச்சரிவுகள், மரங்கள் வேருடன் சாய்தல் மற்றும் மின் இணைப்பு துண்டிப்புகள் உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜமைக்காவில் புயலை எதிர்கொள்ளும் ஒரு பகுதியாக மரங்களை வெட்டும் பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மரங்கள் முறிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளார். இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 174 ஆண்டுகளுக்கு பின் ஜமைக்காவை மெலிஸ்சா புயல் புரட்டி போடக்கூடும் என கூறப்படுகிறது.
