ரஷ்யா, ‘கபரோவ்ஸ்க்’ என்ற பெயரில் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நேற்று அறிமுகம் செய்தது. இது, ‘பொஸைடான்’ எனப்படும் அணு ஆயுத ட்ரோன்- ஏந்திச் செல்லும் திறன் கொண்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா கடந்த சில நாட்களாக, தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது-.
கடந்த, அக்., 21ல், ‘புரோவெஸ்ட்னிக்’ எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது. இது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும், அணு சக்தியில் இயங்கக் கூடியது.
இதையடுத்து, கடலில் செல்லும், ‘பொஸைடான்’ எனப்படும் அணு ஆயுத ட்ரோனை அக்., 29ல் சோதித்தது.
இது, கடல் அலைகளை மிக உயரமான அளவுக்கு துாண்டி எதிரி நாட்டின் கடலோரப் பகுதிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது. இவற்றின் தொடர்ச்சியாக, புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா அறிமுகம் செய்தது.
இதற்கு ‘கபரோவ்ஸ்க்’ என்று பெயரிட்டுள்ளனர். இது ஒரு ரஷ்ய நகரின் பெயர்.
இந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சர் ஆண்ட்ரேய் பெலோசோவ் கூறுகையில், “கபரோவ்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் பொஸைடான் போன்ற அணுசக்தி முறையில் இயங்கும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் பெற்றது.
“ரஷ்யாவின் கடல் எல்லைகளை பாதுகாப்பது, சர்வதேச கடல் எல்லைகளில் ரஷ்யாவின் நலன்களை உறுதிபடுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக, ‘கபரோவ்ஸ்க்’ நீர்மூழ்கி கப்பல் அறிமுகப்படுத்தப்படுகிறது,” என்றார்.
இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின், ‘சீவ்மாஷ்’ கப்பல் கட்டும் தொழிற்சாலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு தான் இந்தியாவின் ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் மறுசீரமைக்கப்பட்டது.
