ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று (01) ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பதி பெருமாள் கோயில் வடிவில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டு 4 மாதங்களே ஆன இக்கோயில் மினி திருப்பதி என அழைக்கப்படுகிறது.
ஏகாதசியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே இக்கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதிகபட்சம் 3 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கையாளும் திறன் கொண்ட இக்கோயிலில் இன்று சுமார் 25,000 பக்தர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
இக்கோயில் தனியாருக்குச் சொந்தமானது. இன்று இவ்வளவு பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கோயில் நிர்வாகத்துக்கு இல்லாததால், அவர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரவில்லை என கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக ஏராளமானோர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் பலர் மயங்கி விழுந்துள்ளனர். இதில், 8 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஆந்திரப் பிரதேச அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, “காசிபுக்கா நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது தனியாருக்குச் சொந்தமானது. ஹரிமுகுந்த் பாண்டா என்ற நபர் தனது சொந்த நிதியில் 12 ஏக்கர் நிலத்தில் இக்கோயிலை கட்டியுள்ளார்.
இன்று ஏகாதசி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு வந்துள்ளனர். 2,000 பக்தர்கள் முதல் 3,000 பக்தர்கள் வரை மட்டுமே சமாளிக்கும் திறன் கொண்டது இக்கோயில். ஆனால், சுமார் 25,000 பேர் ஒரே நேரத்தில் கோயிலுக்கு வந்துள்ளனர். ஆனால், அதற்கேற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அரசு நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்படவில்லை. விபத்துக்கு இதுதான் காரணம்.
சம்பவத்தை அடுத்து முதல்வரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இது எங்களை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஏகாதசி நாளில் எங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு அரசு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகள், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அச்சன்நாயுடு மற்றும் உள்ளூர் எம்எல்ஏ கவுது ஷிரிஷ் ஆகியோரிடம் பேசினேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
