வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரீஃப் நகருக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் குறைந்தது 7 பேர் மரணமடைந்ததுடன், 150க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில்,
மசார்-இ ஷெரீஃப் அருகே 28 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். சுமார் 523,000 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையிலேயே இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மசார்-இ-ஷெரீப்பின் புனித ஆலயமான நீல மசூதியின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாக பால்க் மாகாண செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விரிவான மற்றும் உறுதியான அறிக்கைகள் பின்னர் பகிரப்படும் என்று நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் என்பதுடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடனும் தப்பினர்.

2015 ஆம் ஆண்டில், வடகிழக்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய ஒரு நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானிலும் அருகிலுள்ள வடக்கு பாகிஸ்தானிலும் பல நூறு பேரைக் கொன்றது. 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
