இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர்.
இதுபற்றி பேரிடர் தணிப்பு கழகம் வெளியிட்ட செய்தியில், சிலாகேப் நகரின் சீபியுனிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்து போய் விட்டனர். அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சிலாகேப் நிலச்சரிவில் 16 பேர் பலியாகி இருந்தனர். 7 பேரை காணவில்லை. இதனை தேடுதல் மற்றும் மீட்பு குழுவின் தலைவர் அப்துல்லா கூறினார்.
இதேபோன்று மத்திய ஜாவாவில் பஞ்சார்நிகரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், 2 பேர் பலியானார்கள். 27 பேர் காணாமல் போயுள்ளனர். 30 வீடுகள் மற்றும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழைக்கு இடையே தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
