வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 17 பேருக்கு, ஏமனில் உள்ள ஹவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேற்காசிய நாடான ஏமனின் தலைநகர் சனாவை, ஹவதி பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தனி நிர்வாகத்தை நடத்தும் இவர்களுக்கென தனி நீதி மன்றமும் உள்ளது.
இங்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு உளவு பார்த்ததாக, 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை விசாரித்த, ஹவுதி சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் அவர் களுக்கு மரண தண்டனை விதித்தது.
ஏமன் அரசு தலைவர்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றிய தகவல்களை எதிரிகளுக்கு வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுவே, ராணுவம், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் தளங்களை தாக்க காரணமாக இருந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளுடன், உள்கட்டமைப்பு சேதங்களுக்கு காரணமாகவும் அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த 17 பேரும் பொதுமக்கள் மத்தியில் நிறுத்தப்பட்டு, துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் விடுவிக்கப்பட்டதுடன், ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது-.
