காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில், இஸ்ரேலிய ராணுவம் “மஞ்சள் கோடு” எனப்படும் ஒரு ரகசிய எல்லையை உருவாக்கி, அதைக் கடக்கின்றவர்களை சுட்டுக் கொன்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கோடு சாலையில் வரையப்பட்டதல்ல, செயற்கைக்கோள் படங்களில் மட்டும் தென்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதை சாதாரண மக்கள் கண்ணால் காண முடியாததால், தற்செயலாக அந்த கோட்டை கடக்கின்ற பல பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், இஸ்ரேல் ராணுவம் மஞ்சள் கோட்டிற்கு பின்னால் தங்களது தளங்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களில் சுமார் 40 செயலில் உள்ள இராணுவ நிலைகள் காசாவுக்கு தெற்கில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எல்லை எங்குள்ளது என்று தெரியாததால், மரண அபாயங்களை எதிர்கொள்வதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், காசா நிலப்பகுதியின் 58 சதவீதம் இன்னும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

ஒருபுறம் துப்பாக்கிச்சூடு தொடர்ந்தும் நடந்து வருவதோடு, மறுபுறம் பாலஸ்தீன குடியிருப்புகளை இடித்து தள்ளும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இடிப்பு நடவடிக்கைகள், படைத்துறை மற்றும் காவல்துறையின் ஆயுத பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காசா அரசு ஊடக அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, ஒக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை, வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், நேரடி துப்பாக்கிச்சூடுகள் என குறைந்தது 282 முறை இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
