Canada

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

கனடா அரசு, 2026ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதி (Study Permit) வழங்கும் முறையை எளிதாக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் (Master’s & PhD) பயிலும் மாணவர்களுக்கு இனி மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதம் (Provincial Attestation Letter) தேவையில்லை.

இந்த மாற்றம் கல்வி அனுமதி செயன்முறையை விரைவுபடுத்துவதோடு, தேவையற்ற ஆவணப் பணிகளை குறைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, பல்கலைக்கழக ஏற்பு கடிதம் (Letter of Acceptance) மற்றும் உயிரியளவியல் (Biometrics) சோதனை முடிந்ததும், மாணவர்கள் இரண்டு வாரங்களில் அனுமதி பெறலாம்.

மேலும், இந்த திட்டத்தில் எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதில் எந்த வரம்பும் இல்லை. உலகின் எங்கிருந்தும் தகுதியுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும். இதன்மூலம் மாணவர்களின் குடும்பத்தினரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவர்களின் வாழ்க்கைத்துணை திறந்த வேலை அனுமதி (Open Work Permit) பெறலாம். குழந்தைகள் கல்வி அனுமதி அல்லது பார்வையாளர் விசா பெறலாம். இதனால் நீண்ட தாமதமின்றி குடும்பங்கள் ஒன்றாக கனடாவுக்கு செல்ல முடியும்.

விண்ணப்பிக்க கடவுச்சீட்டு, பல்கலைக்கழக ஏற்பு கடிதம், நிதி ஆதாரச் சான்று மற்றும் பிற ஆவணங்கள் தேவையாகும். அனைத்து விண்ணப்பங்களும் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உயிரியளவியல் (Biometrics) சோதனை முடிவுகள் 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஆவணங்கள் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்வது தாமதங்களைத் தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டப்படிப்புக்குப் பிறகு, மாணவர்கள் கனடாவில் வேலை செய்ய Post-Graduation Work Permit (PGWP) க்கு விண்ணப்பிக்கலாம். இது கனடாவில் வேலை அனுபவத்தை வழங்குவதுடன், நிரந்தர குடியுரிமைக்கு (Permanent Residency) விண்ணப்பிக்கவும் வழிவகுக்கும்.

கல்வி அனுமதி நடைமுறையில் கொண்டு வரப்படும் இந்த மாற்றம், கனடாவை உலகளாவிய அளவில் கல்வி இலக்காகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு மிகவும் வசதியானதும் குடும்பநேசமானதுமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top