2025 அக்டோபர் மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை எதிர்பாராத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.
மொத்தம் 66,600 புதிய வேலைகள் உருவாக, வேலை இல்லாதோர் விகிதம் 7.1 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த வளர்ச்சி, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட வேலை இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளது.
முழுநேர வேலைவாய்ப்பு 18,500 பேர் குறைந்தாலும், பகுதி நேர வேலைகள் 85,000 பேர் அதிகரித்துள்ளன. இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு பெரும்பாலும் தனியார் துறையில் ஏற்பட்டுள்ளது.
இளம் தொழிலாளர்கள் (15-24 வயது) மத்தியில் வேலை இல்லாதோர் விகிதம் 14.7 சதவீதத்திலிருந்து 14.1 சதவீதமாக குறைந்தது. இது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முதல் தடவையாக குறைவாக பதிவாகியுள்ளது.
25–54 வயதுடைய முக்கிய வேலைவாய்ப்பு குழுவில் 38,800 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சியில், சில்லறை மற்றும் மொத்த விற்பனை, போக்குவரத்து மற்றும் களஞ்சிய துறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. சில்லறை மற்றும் மொத்த விற்பனை துறையில் மட்டும் 40,700 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
நிலையான ஊழியர்களின் சராசரி மணி ஊதியம் 4.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கனடா வங்கியின் பணவீக்க கணிப்புகளுக்கு முக்கியமான அளவுகோலாகும். இந்த வளர்ச்சி கனடா டொலரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
