News

காசாவில் கட்டடங்களை இடித்துவரும் இஸ்ரேல்; உதவிகளுக்கும் இடையூறு – காசா போர் நிறுத்தம் குறித்து துருக்கியில் அவசர சந்திப்பு

 

காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலிய படை அங்கங்கே தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு காசாவில் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோன்று இந்த போர் நிறுத்த உடன்படிக்கைகளின்படி காசாவுக்கு முழு அளவில் உதவிகள் செல்வதையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.

இந்தப் போர் நிறுத்த மீறல்களுக்கு மத்தியில் காசாவில் கூடிய விரைவில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் இன்று (03) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. துருக்கியுடன் கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக துருக்கி வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

காசா போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கடந்த செப்டெம்பரில் ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்கு மத்தியில் இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளே இந்த கூட்டத்தை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் போர் நிறுத்தத்தின் மூலம் நிலையான அமைதியை உறுதிப் படுத்துவதில் முஸ்லிம் நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக இது தொடர்பில் நெருங்க்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று காலை தெற்கு காசாவில் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பல வீடுகளையும் இஸ்ரேல் இராணுவம் தகர்த்ததோடு வடக்கு காசாவின் ஜபலியா பகுதியில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று காசாவின் வடக்கில் உள்ள பெயித் லஹியா நகர் மற்றும் தெற்கில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் காசா நகரின் சுஜையா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக அல் அஹ்லி அரபு வைத்தியசாலை தெரிவித்துள்ளது. சுஜையா மற்றும் அருகாமையில் உள்ள செய்தூன் பகுதிகளில் இஸ்ரேலியப் படை கட்டடங்களை இடித்து வரும் நிலையிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு ஏழு சடலங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் இதில் மூவர் அண்மையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மூவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் ஒருவர் காயத்தினால் உயிரிழந்தவராவார்.

குறிப்பாக கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிகை 236 ஆக அதிகரித்திருப்பதோடு குறைந்தது 600 பேர் காயமடைந்துள்ளனர்.

போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டபோதும் காசாவில் இஸ்ரேல் தனது முற்றுக்கையை தொடர்ந்து இறுக்கி வருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கையின்படி அனுமதிக்க வேண்டிய உதவிகளில் சொற்பமான அளவே கிடைக்கப்பெறுவதாக காசா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 மற்றும் 31 இற்கு இடையே காசாவுக்கு 3,203 வர்த்தக மற்றும் உதவி லொறிகள் வந்திருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி சராசரியாக நாளொன்று 145 உதவி லொறிகள் காசாவுக்கு சென்றிருப்பதோடு இது போர் நிறுத்த உடன்படிக்கையில் எட்டப்பட்ட நாளுக்கு 600 உதவி லொறிகளில் வெறும் 24 வீதம் மாத்திரமாகும் என்று அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘உதவி மற்றும் வர்த்தக லொறிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து வருவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் காசா பகுதியில் உள்ள 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்கொள்ளும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைக்கு இஸ்ரேல் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று காசா அரச ஊடக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top