கடந்த வாரம் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மூன்று வைத்தியர்கள் உட்பட மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனமான இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் படை வியாழக்கிழமை (20) தெரிவித்துள்ளது.
இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலத்த பாதுகாப்புடன் கூடிய தலைநகரில் நடந்த முதல் தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
கடந்த 10 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதோடு, 32 பேர் காயமடைந்தனர்.
இந்திய காஷ்மீரைச் சேர்ந்த வைத்தியர் முசம்மில் ஷகீல் கனாய், வைத்தியர் அதீல் அகமது ராதர் மற்றும் முஃப்தி இர்பான் அகமது வாகே, லக்னோவைச் சேர்ந்த வைத்தியர் ஷாஹீன் சயீத் ஆகிய நால்வர் பிரதான குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவர் பெயரில் இருந்தது. அவர்தான் காரை வாங்கி உமர் முகமதுவுக்கு கொடுத்துள்ளார். இதனால் அமீர் ரஷீத் அலியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட முதலில் ஜாசிர் பிலால்வானி என்பவர்தான் ஆயத்தமாக்கப்பட்டார். ஆனால் இடையில் அவர் பின்வாங்கியுள்ளர். இவர் உமர் முகமதுவின் நண்பராக இருந்தார். இவரையும் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர் இவர்கள் 2 பேரும் நீதிமன்றில் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையே உமர் முகமதுவுடன் சேர்ந்து அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வைத்தியர்கள் முசாமில் ஷகீல், ஷாகீன் சயித், அங்கு தங்கியிருந்த முப்தி இர்பான் அகமது மற்றும் வைத்தியர் அதீல் அகமது ராதர் ஆகியோரும் பிடிபட்டுள்ளனர்.
இவர்களை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் முறையாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அவர்களை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
