இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் (Red Fort Metro Station) அருகே இன்று திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, இன்று மாலை 6:30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடி விபத்தில், அருகிலிருந்த வேன், ஆட்டோ மற்றும் கார் உட்பட 8 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன.
லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை நிர்வாகம், 8 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG)உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்ய விரைந்துள்ளனர்.
வெடிப்புச் சம்பவம் நடந்த நேரமும், இடமும் சதிச்செயலுக்கான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால், வெடிவிபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறிப்பாக, அண்மையில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் கூட்டுத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடந்த வாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானாவில் மருத்துவர்கள் உட்பட சிலர், 360 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயுத விநியோகம் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிவிபத்து தொடர்பாகச் சம்பவ இடத்தில் இருந்து சிக்கிய 2 பேரிடம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் யாருடையது, வெடிப்புக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் சதி ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
டெல்லியின் முக்கியப் பகுதிகளான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மட்டுமின்றி, மும்பை, உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
