ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 303 குழந்தைகள் மற்றும் 12 ஆசிரியர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த 18-ந்தேதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை ஆயுதக்குழுவினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 38 பேர் விடுவிக்கப்பட்டனர். நேற்றைய தினம் நைஜீரீயாவின் வடகிழக்கு பகுதியில் ஆயுதக்குழுவினருடன் நடந்த மோதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த ஆயுதக்குழுவினரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம், கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 குழந்தைகள் ஆயுதக்குழுவினரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
