உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன்படி உக்ரைன் எல்லைக்குள் ரஷியா சரமாரி டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷியா போர் தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கி மேற்கொள்ளும் 9-வது பிரான்ஸ் சுற்றுப்பயணம் இதுவாகும். அங்கு அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து அவர் பேசினார்.
அப்போது பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் நாட்டின் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
