பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளுடன் கூடிய அதிக குடும்பங்களை வெளியேற்றுதல் அவரின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
இதற்கமைய, 3,000 பவுண்ட் வரையிலான ஊக்கத்தொகையை வழங்கி தன்னார்வமாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ குடும்பங்கள் வெளியேற்றப்படும்.
அகதி அந்தஸ்து பெற்றவர்கள், நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்கும் காத்திருப்பு காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை அதிகரித்தல் மற்றுமொரு திட்டமாகும்.
அத்துடன், தஞ்சம் கோருபவர்களுக்கு நிதி ஆதரவு வழங்குவதற்கான சட்டப்பூர்வமான கடமையை நீக்குவது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வேலை செய்ய உரிமை இருந்தும் வேலை செய்யாதவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.
இதேவேளை, நாடு கடத்தப்படுபவர்களை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு விசா வழங்குவதைத் தடை செய்தல் ஷபானா மஹ்மூத்தின் மற்றுமொரு யோசனையாகும்.
இந்நிலையில், இந்த முன்மொழிவுகளுக்கு தொழிலாளர் கட்சியின் இடதுசாரிகள் மத்தியில் ஏற்கனவே எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
