News

போர் நிறுத்தத்தின் பின்னர் காசாவில் 1,500 கட்டடங்களை தகர்த்தது இஸ்ரேல்

 

காசாவில் போர் நிறுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,500இற்கு மேற்பட்ட கட்டங்களை அழித்திருப்பதாக செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி பெறப்பட்ட புதிய புகைப்படங்களில் காசாவில் இஸ்ரேலிய படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த குடியிருப்பு பகுதிகளும் தரைமட்டமாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விடவும் அழிக்கப்பட்டிருக்கும் கட்டடங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகமாக உள்ளது என பி.பி.சி. மதிப்பீட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுடன் எகிப்து, கட்டார் மற்றும் துருக்கியும் மத்தியஸ்தம் வகித்த போர் நிறுத்தத்தை மீறும் செயல் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் போர் நிறுத்த கட்டமைப்புக்கு அமையவே செயற்படுவதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் பி.பி.சி. இற்கு தெரிவித்துள்ளார்.

காசா தொடர்பிலான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இதில் ‘வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் ‘போர் முடிவுக்கு வந்துவிட்டதாக’ டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

எனினும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து கட்டடங்களை பாரிய அளவில் இடித்து வருவதாக செய்திமதிப் படங்கள் காட்டுகின்றன. போர் நிறுத்தத்திற்கு முன்னர் பெறப்பட்ட மற்றும் போர் நிறுத்தத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்ட செய்மதிப் படங்களை ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேலியப் படை பின்வாங்கிய மஞ்சள் கோட்டு எல்லைப் பகுதிக்கு பின்னால் இருக்கும் காசாவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இவ்வாறு பெருமளவில் கட்டடங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மஞ்சள் கோட்டுக்கு பின்னால் இருக்கும் இஸ்ரேல் ஆக்கிமிப்பு காசா பகுதியில் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களுக்கு வீடுகளை கட்ட அமெரிக்கா திட்டமிடுவதாக ‘தி அட்லான்டிக்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாதுகாப்பான மாற்று சமூகம்’ என்ற பெயரில் இந்தத் திட்டத்தை செயற்படுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு இந்த வீட்டுத் திட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

இஸ்ரேல் அடிக்கடி மீறி வரும் தற்போதைய போர் நிறுத்தத் திட்டத்தை மேற்பார்வை இடும் சிவில் – இராணுவ ஒருங்கிணைப்ப நிலையத்தின் தலைவரான அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் பட்ரிக் பிராங்க்கின் மின்னஞ்சல் ஒன்றில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒரு மாதத்தை தாண்டி நீடிக்கும் காசா போரில் இஸ்ரேல் தினசரி போர் நிறுத்தத்தை மீறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கடந்த ஒக்டோபர் 10 தொடக்கம் நவம்பர் 10 வரையான காலத்தில் குறைந்தது 282 தடவைகள் போர் நிறுத்த உடன்படிக்கையை அது மீறி இருப்பதாகவும் வான், பீரங்கி தாக்குதல்கள் மற்றும் நேரடி துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருவதாகவும் காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது இஸ்ரேல் பொதுமக்கள் மீது 88 தடவைகள் சூடு நடத்தி இருப்பதாகவும் மஞ்சள் கோட்டைத் தாண்டி குடியிருப்புகளில் 12 தடவைகள் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருப்பதாகவும், 124 தடவைகள் காசாவில் குண்டு வீச்சுகளை மேற்கொண்டிருப்பதாகவும் மற்றும் 52 தடவைகள் மக்கள் சொத்துகளை தகர்த்திருப்பதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலியப் படை நேற்றைய தினத்திலும் வடக்கு காசாவின் பைத் லஹியா பகுதியில் மூன்று தடவைகள் வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு மத்திய காசாவில் புரைஜ் அகதி முகாமின் கிழக்கு பகுதியில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 245 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 627 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top