News

ரணிலை விடாது துரத்தும் குற்றப்புலனாய்வுத்துறையினர்

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுத்துறையினர், இங்கிலாந்துக்குச் சென்றுள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

எனினும் இதற்கான அனுமதி சட்டமா அதிபரிடம் பெறப்படவில்லை என்று ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் தலைமையிலான குழுவே பிரித்தானியாவுக்கு சென்றுள்ளது.

இந்தநிலையில் பிரித்தானியா சென்றுள்ள குற்றப்புலனாய்வுத்துறையினர் இங்கிலாந்தில் உள்ள முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் இன்றையதினம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பரில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் அவருடைய மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது, சரோஜா சிறிசேனவே,இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக கடமையாற்றினார்.

இந்தநிலையில் தற்போதும், இங்கிலாந்தில் இன்னும் வசிக்கும் சிறிசேன, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரண்டு நாள் பயணத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் பொதுநிதியை ரணில் விக்ரமசிங்க செலவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ரணில்,இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top