திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கனடாவில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப்பட்டன.
30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், விடுதலைப் புலிகளை நினைவுகூர வேண்டிய தார்மீக அதிகாரம் இருக்கின்றதா?
இந்த புதிய சித்தாந்தங்களை இப்போதே தோற்கடிக்கத் தவறினால், நாடு தவிர்க்க முடியாமல் ஒரு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும்.
அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தூண்டப்பட அனுமதித்தால், முந்தைய அரசாங்கம் சந்தித்த அதே வீழ்ச்சியை இந்த அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன்.
விடுதலைப்புலிகளுடன் இணைந்து அஸ்மின் மீண்டும் வடக்கு, கிழக்கை மற்றொரு பலஸ்தீனாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது.
தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது. 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.
பிரதேசசபையின் அனுமதியின்றி தொல்பொருள் பெயர் பலகையை நிறுவ முடியாது என முரண்படும் நிலைமைக்கு அரசாங்கம் இடமளிக்கின்றதா? இந்த நிலைமைகள் இப்போதே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றார்.
