News

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 43 பேர் உயிரிழப்பு

 

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக  அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளியினால் ஏற்கனவே விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களாகவே வியட்நாமில் சீரற்ற வானிலை நிலவுகிறது. கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு சூறாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாக  தாக்கி பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சுற்றுலா நகரமான டா லாட்டுக்கான முக்கிய நுழைவுப் பாதையான மிமோசா கணவாயின் ஒரு பகுதி பள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இடிந்த பகுதியில் உருவான பெரிய இடைவெளியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு அவசரகால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளில் இராணுவப் படையினரும் பொலிஸாரும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வியட்நாமில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமானது முதல் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top