அமெரிக்கா, கனடாவிற்கு 2.7 பில்லியன் டொலர் மதிப்பிலான விமான தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் 3,414 BLU-111 குண்டுகள் (ஒவ்வொன்றும் 500 பவுண்ட் எடையுடையவை) மற்றும் 3,108 GBU-39 குண்டுகள் அடங்கும்.
BLU-111 குண்டுகள் எதிரி படையினரை தாக்க பயன்படுத்தப்படுகின்றன. GBU-39 குண்டுகள் நிலையான இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டவை.
மேலும், 5,000-க்கும் மேற்பட்ட JDAM Kit-கள் இதில் அடங்குகின்றன. இவை பழைய குண்டுகளை smart guided bombs-ஆக மாற்றும் தொழில்நுட்பம் கொண்டவை.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இந்த விற்பனை கனடாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் என்றும், அமெரிக்க படைகளுடன் இணைந்து செயல்படும் திறனை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
“இந்த ஒப்பந்தம், பிராந்தியத்தில் தாக்குதலைத் தடுக்க கனடாவின் நம்பகமான பாதுகாப்புத் திறனை உயர்த்தும்” என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க உறுதியளித்துள்ளார். அவர், இந்த ஆண்டுக்குள் NATO இலக்கான GDP-இன் 2 சதவீதம் பாதுகாப்பு செலவினை நிறைவேற்றுவோம் என அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், NATO கூட்டாளிகள் அமெரிக்காவை அதிகம் சார்ந்துள்ளனர் என விமர்சித்து வந்தார். கடந்த காலத்தில் கனடாவை “அமெரிக்காவின் 51வது மாநிலம்” எனக் கேலி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம், அமெரிக்கா-கனடா உறவை வலுப்படுத்துவதோடு, வட அமெரிக்க பாதுகாப்பு அமைப்பில் கனடாவின் பங்கு அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
