அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 40 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு தீயணைப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு 52 இடங்களில் எரிந்துகொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்பது இடங்களில் புதிதாக தீ ஏற்பட்டிருக்கின்றது.
இந்த மாகாணத்தில் கடந்த வார இறுதியில் 20 வீடுகள் எரிந்து நாசமாகின. டால்பின் சாண்ட்ஸ் கடலோரப் பகுதியில் காட்டுத் தீயால் 19 வீடுகள் எரிந்துள்ளன. இங்கு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் வீதி இன்னும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினமிரவு புலாடெலா நகருக்கு அருகே காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் மீது மரம் விழுந்துள்ளதோடு அந்நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இப்பகுதியில் காட்டுத் தீக்கு 3,500 ஹெக்டேயர் வனப்பகுதியும் நான்கு வீடுகளும் எரிந்து அழிந்துள்ளன. என்று கிராமப்புற தீயணைப்பு சேவை ஆணையர் ட்ரென்ட் கர்டின் குறிப்பிட்டுள்ளார். இத்தீயை அணைக்க இன்னும் பல நாட்களுக்குத் தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
