பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாதை வைத்திருந்ததற்காக லண்டனில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (Greta thunberg) பின்னர், விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்தமை “தவறானது” என்றும் “தொல்லை தரக்கூடிய செயல்” என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதோடு, அவர் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று உலகம் முழுவதும் அறியப்பட்ட 22 வயதுப் பெண் ஆவார்.
இங்கிலாந்து அரசால் தடை செய்யப்பட்ட “பாலஸ்தீன அக்ஷன்” (Palestine Action) அமைப்புக்கு ஆதரவாக, பாலஸ்தீன நடவடிக்கைகளை ஆதரிக்கும் விதமாக, பதாதையொன்றை பிடித்தபடி வீதியில் உட்கார்த்திருந்த கிரெட்டா தன்பெர்க் (Greta thunberg) லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் போராட்டங்களில் ஈடுபட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன ஆக்ஷன் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களில் சிலர் உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்களுக்காக கிரெட்டா தன்பெர்க் அமைதியாக முறையில் குரல் கொடுத்தார்.
போராட்டவேளையில் “பாலஸ்தீன அக்ஷன் அமைப்பைச் சேர்ந்த கைதிகளை நான் ஆதரிக்கிறேன். இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” (“I support the Palestine Action prisoners. I oppose genocide”) என குறிப்பிடப்பட்டிருந்த பதாதையை பிடித்தபடி உட்கார்ந்திருந்த கிரெட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டார்.
அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர், விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிரான கைது நடவடிக்கையானது “தவறானது” என்றும் “தொல்லை தரக்கூடிய செயல்” என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் இச்சபையானது, இனப்படுகொலையை அமைதியாக எதிர்த்ததற்காகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்களை ஆதரித்ததற்காகவும் கிரெட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டமை தவறான செயல். கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகளைப் பயன்படுத்துபவர்களை குறிவைக்க இங்கிலாந்தின் பயங்கரவாத சட்டங்கள் பயன்படுத்தப்படுவதற்கு, இந்த கைது நடவடிக்கை அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டாகிறது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன அக்ஷன் ஆர்வலர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் நடுங்க வைக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
