உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான வைரங்களில் ஒன்றான புளோரென்டைன் வைரம், 100 ஆண்டுகளுக்குப் பின், கனடாவில் உள்ள ஒரு வங்கி பெட்டகத்தில் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
புளோரென்டைன் வைரம் என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். 137.27 காரட் எடையில் வெளிர் மஞ்சள் நிறத்தில், 126 முகங்கள் கொண்ட இரட்டை ரோஜா வடிவத்தில், பட்டை தீட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வைரமாகும். இந்த வைரம் 15-ம் நுாற்றாண்டு முதல் பல ஐரோப்பிய அரச குடும்பங்களிடம் இருந்துள்ளது.
இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தை ஆண்ட மெடிசி குடும்பம் மற்றும் ஆஸ்திரியாவின் ஹப்ஸ்பர்க் வம்சத்தின் வசம் இருந்துள்ளது.
முதல் உலகப் போரின் முடிவில் ஆஸ்திரியா- – ஹங்கேரி பேரரசு சரிந்தபோது, கடைசி பேரரசர் முதலாம் சார்லஸ் மற்றும் பேரரசி ஜீட்டா, தங்களுடைய ஆபரணங்களை பாதுகாக்க சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினர்.
அதன்பின், இந்த வைரம் காணாமல் போனதாகவும், திருடப்பட்டதாகவும், பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன.
ஆனால், இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாஜி படைகளிடம் இருந்து தப்பி, வட அமெரிக்க நாடான கனடாவுக்கு வந்த பேரரசி ஜீட்டா, இந்த வைரத்தையும் மற்ற ஆபரணங்களையும் ஒரு சிறிய சூட்கேசில் எடுத்து வந்து, வங்கி பெட்டகத்தில் வைத்தார்.
பாதுகாப்புக்காக, இந்த ரகசியத்தை தன் இரு மகன்களிடம் மட்டும் சொல்லி, பேரரசர் சார்லஸ் இறந்து 100 ஆண்டுகள் வரை வெளியில் சொல்லக் கூடாது என, சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
தற்போது 100 ஆண்டுகள் முடிந்த நிலையில், ஹப்ஸ்பர்க் வம்ச வாரிசுகள் இந்தத் தகவலை வெளியிட்டனர். கனடா தங்கள் குடும்பத்தை போர்க்காலத்தில் அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றியாக, இந்த வைரத்தையும் மற்ற ஆபரணங்களையும் கனடா அருங்காட்சியகத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வைரத்தின் மதிப்பு, 19ம் நுாற்றாண்டிலேயே 12 கோடி ரூபாய்க்கு மேல் இருந்த நிலையில், தற்போதைய மதிப்பு வெளியிடப்படவில்லை.
