ஒன்ராறியோ அரசு, ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் பொதுப்போக்குவரத்தை தொடர்ந்தும் குறைந்த செலவிலும் எளிதாகவும் வைத்திருக்க,‘ஒற்றைக்கட்டண’ திட்டத்தை 2025 டிசம்பர் 1ஆம் திகதியிருந்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள இத்திட்டத்தின் மூலம் இதுவரை ஒன்ராறியோ வாழ் மக்கள் சுமார் 200 மில்லியன் டொலர்களைச் சேமித்ததோடு, ரீரீசி, கோ போக்குவரத்துச் சேவை, பிரம்ரன் போக்குவரத்து, டூறம் பிரதேசப் போக்குவரத்து, மிசிசாகாவின் ‘மைவே’, பீல் போக்குவரத்து, யோர்க் பிரதேசப் போக்குவரத்து போன்ற சேவைகளுக்கிடையில் மொத்தம் 62 மில்லியன் இலவச மாற்றுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்துவதால், ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டிற்கு 1600 டொலர்கள் வரை சேமிக்க முடிகிறது.
இத்திட்ட நீட்டிப்பு குறித்து அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் குறிப்பிடும்போது,“பொருளாதாரச் சுமை மிகுந்த இக்காலகட்டத்தில், ஒற்றைக்கட்டணத் திட்டத்தை நீட்டிப்பது பயணச் செலவைக் குறைப்பதற்கும் மேலாக, உழைக்கும் வர்க்க குடும்பங்களுக்கு உடனடி மற்றும் கணிசமான நிவாரணத்தை அளிக்கிறது. ஆண்டு ஒன்றிற்கு 1600 டொலர்கள் வரை சேமிக்க உதவி செய்வதன் மூலம், அவர்கள் உழைக்கும் பணத்தில் அதிக சேமிப்பைச் செய்யவும் முடிகிறது. அதேசமயம் அவர்களின் அன்றாடப் பயணச் செலவீனங்களையும் குறிப்பிடத்தக்க முறையில் குறைக்கிறது” என்றார்.
இந்தத் திட்டத்தின் நீட்டிப்பு, ஒன்ராறியோ அரசின் 70 பில்லியன் டொலர் மதிப்பிலான போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, பிரதேசங்களுக்கிடையேயான தடையற்ற பயணத்தை வழங்குகிறது.
