காசாவில் இருந்து இஸ்ரேல் ஒருபோதும் முழுமையாக வெளியேறப் போவதில்லை என்றும் அந்த பலஸ்தீன நிலப்பகுதிக்கு இராணுவ பிரிவுகள் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் அமெரிக்க மத்தியஸ்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் காசாவில் இருந்து முழுமையாக வாபஸ் பெறுவதற்கு இஸ்ரேல் இணங்கியபோதும் இஸ்ரேலியப் படைகள் காசா முழுவதும் நிலைநிறுத்தப்படும் என்று கடந்த செவ்வாயன்று (23) பேசிய காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் காசாவில் மீண்டும் இஸ்ரேலிய குடியேற்றங்களை அமைக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்திருந்தார்.
‘நாம் காசாவுக்குள் ஆழமாக நிலைகொண்டிருப்பதோடு காசாவில் இருந்து முழுமையாக வெளியேறப்போவதில்லை’ என்றார். ‘நாம் அங்கே பாதுகாப்புக்கு இருப்போம். சரியான நேரத்தில் வடக்கு காசாவில் பறிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு பதிலாக நஹல் (இஸ்ரேலிய காலாட்படை படையணி) புறக்காவல் நிலையங்களை நிறுவுவோம்’ என்றும் காட்ஸ் குறிப்பிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காடஸின் இந்த கருத்து தொடர்பில் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட சில மணி நேரத்தில், காசாவில் இந்த புறக்காவல் நிலையங்கள் பாதுகாப்பு காரணத்திற்காக மத்திரமே நிறுவப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேல் ஊடகம் வெளியிட்ட இந்த செய்தி குறித்து காட்ஸ் மீது அமெரிக்க அதிகாரிகள் அதிருப்தியை வெளியிட்டிருப்பதோடு அதற்கு விளக்கமும் கேட்டிருப்பதாக தெரியவருகிறது.
இஸ்ரேலின் நஹல் பிரிவுகள் என்பது சிவில் சேவையை இராணுவத்துடன் இணைக்கும் இராணுவ அமைப்பு ஒன்றாகும். கடந்த காலங்களில் இந்த அமைப்பு இஸ்ரேலிய குடியேற்றங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றமான பெயித் எல்லில் 1,200 வீட்டு அலகுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றே காட்ஸ் மேற்படி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவது குறித்து பேசிய காட்ஸ், ‘நெதன்யாகுவின் அரசாங்கம் என்பது ஒரு குடியேற்ற அரசாகும்… அதற்காக அது பணியாற்றுகிறது. நம்மால் இறைமையை கொண்டுவர முடியும் என்றால் அந்த இறைமையை நிலைநிறுத்துவோம். நாம் தற்போது நடைமுறை ரீதியான இறைமையின் காலகட்டத்தில் இருக்கிறோம். நீண்ட காலமாக இல்லாத வாய்ப்புகள் இங்கே உள்ளன’ என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் 2026 இல் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதோடு, சட்டவிரோத குடியேற்றங்களின் விரிவாக்கம் இதில் முக்கிய விவகாரமாக உள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதயாகுவின் கூட்டணி அரசில் உள்ள வலதுசாரி மற்றும் தீவிர தேசியவாத உறுப்பினர்கள் காசாவை மீண்டும் ஆக்கிரமிப்பது குறித்தும் மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
சர்வதேச சட்டத்தின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் அனைத்து இஸ்ரேலிய குடியேற்றங்களும் சட்ட விரோதமாகும். ஆக்கிரமிப்பு சக்தி ஒன்று சிவில் சமூகத்தை ஆக்கிரமிப்பு நிலப் பகுதியாக மாற்றுவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தின் கீழ் போர் குற்றம் ஒன்றாக கருதப்படுகிறது.
காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் அதேநேரம் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் மற்றும் இஸ்ரேலியக் குடியேறிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான வன்முறைகளில் 1,100 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு சுமார் 11,000 பேர் காயமடைந்திருப்பதோடு 21,000இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் புதிய போர் நிறுத்த மீறல்களாக தெற்கு நகரான ரபாவின் பல இடங்களிலும் நேற்று (24) இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபாவின் மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய படை சூடு நடத்தியதாகவும் பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறாக தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 400இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
