காசாவில் போர் நிறுத்தத்தை அடுத்து இஸ்ரேலியப் படை பின்வாங்கிய மஞ்சள் கோட்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்டடங்களை தொடர்ந்து தகர்த்து வரும் இஸ்ரேலிய படை மஞ்சள் கோட்டுக்கு அப்பால் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாடு துப்பாக்கிச் சூடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி எட்டப்பட்ட போர் நிறுத்தத்தின்படியே அடையாளப்படுத்தப்படாத பகுதியான மஞ்சள் கோட்டுப் பகுதிக்கு இஸ்ரேலியப் படை பின்வாங்கியது. இஸ்ரேல் நிலை கொண்டிக்கும் இந்த எல்லைப் பகுதி காசாவின் பாதிக்கும் அதிகமான நிலப்பகுதியை ஆக்கிரமித்ததாக உள்ளது.
இந்த மஞ்சள் கோட்டுக்கு பின்னால் உள்ள காசா நகரின் கிழக்குப் பகுதியில் நேற்று (02) சூரியோதயம் தொடக்கம் இஸ்ரேலியப் படை கட்டடங்களை இடிப்பது மற்றும் அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா நகரின் கிழக்கே உள்ள ஷாஃப் பகுதியில் உள்ள சுஜையா சந்திப்புக்கு அருகில் இஸ்ரேலிய இராணுவம் ஒரு ரோபோ இயந்திரத்தை வெடிக்கச் செய்ததாகவும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த மஞ்சள் கோட்டை தாண்ட முயன்றதாகக் கூறி பலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய படை கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொன்றுள்ளது. இது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘பயங்கரவாதி ஒருவர் மஞ்சள் கோட்டை தாண்டி துருப்புகளை அணுகிய நிலையில் அவசர அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இது அடையாளம் காணப்பட்டு விமானப்படையால் துருப்புகள் எச்சரிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பயங்கரவாதி கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை. எனினும் மஞ்சள் கோட்டை தாண்டியதாக குற்றம்சாட்டி கடந்த திங்களன்று மேலும் இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த மஞ்சள் கோட்டு பகுதி குறிப்பிட்டு அடையாளம் இடப்படாத நிலையில் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் பலஸ்தீனர்கள் தமது வீடுகளை நோக்கி இந்த எல்லையை தாண்டி செல்ல முயன்று வருவதோடு அவர்கள் மீதே இஸ்ரேலியப் படை அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறானவர்கள் மீது எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலியப் படை அவர்களை பயங்கரவாதிகள் என்றும் குற்றம்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நவம்பர் நடுப் பகுதி வரையான காலப்பகுதி வரை இந்த மஞ்சள் எல்லைக் கோட்டை தாண்டியதற்காக 30 மற்றும் 40 இற்கு இடைப்பட்ட காசா பொது மக்களை இஸ்ரேலியப் படை கொன்றிருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலியப் படை நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். அல் துபா பகுதியில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் சூடு நடத்தியதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா நகருடன் கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளே இஸ்ரேலின் தினசரி தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் பிரதான இடங்களாகும். போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்திருப்பதோடு 900இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இங்கு ஹெப்ரோன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது முஹமது தாரிக் முஹமது அல் சுஹைர் என்ற சிறுவன் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெப்ரோனின் வடக்கு நுழைவாயிலில் நேற்று இடம்பெற்ற காரை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடர்ந்தே இந்தப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் ரமல்லா நகரில் அட்டார்டே குடியிருப்புப் பகுதிக்கு அருகே படையினர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபரை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது. இந்தத் கத்திக்குத்து தாக்குதலில் இரு படையினர் சிறு காயத்திற்கு உள்ளானதாக இஸ்ரேலிய அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
