News

கோவா தீ விபத்தில் 25 பேர் பலியான வழக்கு: தப்பியோடிய விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது

 

கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகிய இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ இரவு விடுதியில் கடந்த டிசம்பர் 6ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற முயன்றனர். குறுகிய வாசல் என்பதால், அனைவராலும் ஒரே சமயத்தில் வெளியேற முடியவில்லை.

அதில், சிலர் தரைதளத்தில் இருந்த சமையலறையில் புகுந்தனர். இதில், பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், நடன நிகழ்ச்சியின் போது, மின்சார பட்டாசுகள் கொளுத்தப்பட்டதால், அதிலிருந்து புறப்பட்ட தீப்பொறி காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதை தெரிவித்த நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்தும் உறுதிப்படுத்தி உள்ளார்.

விபத்து நடந்ததை அடுத்து விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகியோர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பி சென்றனர். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இண்டர்போல் மூலம் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது விடுதியின் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகிய இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top