சிரியாவின் ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள இமாம் அலி இப்னு அபி தாலிப் பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை மதியத் தொழுகையின் போது நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதுடன் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் இந்த விபரீதம் நிகழ்ந்ததாக சிரிய அரச ஊடகமான ‘சனா’ (SANA) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ‘சரயா அன்சர் அல்-சுன்னா’ (Saraya Ansar al-Sunnah) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு பள்ளிவாசலின் உட்புறத்தைச் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. அங்கிருந்த சுவர்கள் கருகி, ஜன்னல்கள் சிதறி, தரைவிரிப்புகள் இரத்தக் கறையுடன் காட்சியளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்த ‘வாடி அல்-தஹாப்’ (Wadi al-Dhahab) பகுதி, சிரியாவின் சிறுபான்மையினரான அலவைட் (Alawite) சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இடமாகும்.
கடந்த ஆண்டு பஷர் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறைகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலும் பார்க்கப்படுகிறது.
சிரிய வெளியுறவுத்துறை அமைச்சு இந்தத் தாக்குதலை ஒரு “கோழைத்தனமான பயங்கரவாதக் குற்றம்” என்று வன்மையாகக் கண்டித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவே இத்தகைய செயல்கள் செய்யப்படுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
தற்போது பாதுகாப்புப் படையினர் பள்ளிவாசலை சுற்றி வளைத்து, தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஓராண்டு நிறைவடையும் நிலையில், மீண்டும் மதவாத மோதல்கள் வெடிப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
