கிழக்கில் உள்ள ஒரு முக்கிய மின் உற்பத்தி நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதல்களால் சூடானின் தலைநகர் கார்ட்டூம் மற்றும் கடலோர நகரமான போர்ட் சூடான் உட்பட சூடானின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை இராணுவ ஆதரவு ஒத்துழைப்பு படையினர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைல் நதி மாநிலத்தின் அட்பாராவில் உள்ள மின்கட்டமைப்பு வசதி தாக்குதலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து தீப்பிழம்பும் கரும் புகையும் எழுந்தன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள சூடான் ஆயுதப்படைகள் விரைந்து செயற்பட்டு இத்தீயைக் கட்டுப்படுத்தியுள்ளது.
எனினும் தீயை அணைக்க முயன்ற ஆரம்ப கட்டத்தில் இரண்டு சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்,
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது இரண்டாவது ட்ரோன் தாக்கிய சமயம் மீட்புப் பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
டிசம்பர் மாதம் ஆரம்பமானது முதல் சூடானின் பல பகுதிகள் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோர்டோஃபான் பிராந்தியத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 104 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தெற்கு கோர்டோஃபானின் கலோகியில் உள்ள முன்பள்ளி மற்றும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 43 பிள்ளைகள், எட்டு பெண்கள் உட்பட 89 பேர் இறந்தமை தெரிந்ததே.
