நைஜீரியாவில், கத்தோலிக்க பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களில், 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கிறிஸ்துவ குழு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள பாபிரி என்ற இடத்தில், செயின்ட் மேரிஸ் கத்தோலிக்க உறைவிட பள்ளி செயல்படுகிறது.
கடந்த மாதம் 21ம் தேதி, இந்த பள்ளிக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய கும்பல், 300க்கும் மேற்பட்ட மாணவர்களையும், 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றது. அடுத்த சில மணி நேரத்தில், 50 மாணவர்கள் அக்கும்பலிடம் இருந்து தப்பினர்.
இந்நிலையில் தற்போது, 100 மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக நைஜீரியாவின் கிறிஸ்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் எப்படி மீட்கப்பட்டனர் என்பது குறித்த தகவலை அச்சங்கம் வெளியிடவில்லை.
