பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணம் மிரன் ஷா பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் ஷா வாலி. இவர் இன்று காரில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு 2 போலீசார் பாதுகாப்பிற்காக சென்றனர்.
கைபர் பக்துவா மாகாணத்தின் பனு மாவட்டத்தில் உள்ள சாலையில் சென்றபோது ஷா வாலியின் காரை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஷா வாலி மற்றும் காரில் இருந்த 2 போலீசார் உள்பட 4 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
