ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக் ஆகிய இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு நிதியில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதவிர மேலும் பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன.அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
