பிரான்ஸ் நாட்டின் பெசன்கான் நகரில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றிய 53 வயதான பிரடெரிக் பெச்சியர் என்பவருக்கு 12 நோயாளிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், சுமார் 30 நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷம் கொடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பைகளில் பொட்டாசியம் குளோரைடு போன்ற வேதிப்பொருட்களை அவர் இரகசியமாகக் கலந்துள்ளார்.
இதனால் நோயாளிகளுக்குத் திடீர் மாரடைப்பு ஏற்படும்போது, அவசர சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றுவது போல நடித்து, தன்னை ஒரு சிறந்த மருத்துவராக காட்டிக்கொள்ள அவர் முயன்றதாக அரசுத்தரப்பு நிரூபித்துள்ளது.
சக மருத்துவர்களுடன் இருந்த முன்விரோதம் காரணமாக அவர்களைச் சிறுமைப்படுத்தவும் அவர் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் 4 வயது சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடரடபான விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை பெச்சியர் மறுத்த போதிலும், அவர் பணியாற்றிய காலங்களில் மட்டும் மருத்துவமனையில் மாரடைப்பு மரணங்கள் வழக்கத்தை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்ததை ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
15 வாரங்கள் நடைபெற்ற நீண்ட விசாரணைக்குப் பிறகு, பிரெஞ்சு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், அவர் குறைந்தது 22 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பை “நீண்ட நாள் போராட்டத்திற்குப் கிடைத்த நீதி” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
