News

போரை நிறுத்த ஜெலன்ஸ்கி விரும்பவில்லை; உக்ரைன் அதிபர் மீது டிரம்ப் அதிருப்தி

 

 

‘ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான முன்மொழிவு மீது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துவது, அவர் போர் நிறுத்தத்தை விரும்பவில்லையோ என்று எண்ண தோன்றுகிறது’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், நான்கு ஆண்டுகளை எட்ட உள்ளது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, காசா – இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முன்மொழிந்ததைப் போன்றதொரு அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா – உக்ரைன் போருக்கும் முன்மொழிந்தது.

இதற்கு, ரஷ்யா முதலில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான அம்சங்கள் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஒருசில அம்சங்களை மாற்றியமைத்து மீண்டும் அமைதி ஒப்பந்தத்துக்கான முன்மொழிவை அமெரிக்கா வெளியிட்டது. ஒருசில அம்சங்கள் நடைமுறைக்கு ஒத்துவராதவை எனக்கூறி, ரஷ்யா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அமைதி ஒப்பந்த முன் மொழிவு குறித்து, மூன்று நாட்களாக அமெரிக்காவின் மியாமியில், அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளிடையே பேச்சு நடந்து வந்த நிலையில், எவ்வித முடிவுமின்றி முடிந்தது.

இப்பேச்சு நடந்து முடிந்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் கருத்தை தெரிவித்தார்.

அதில், இந்த அமைதி ஒப்பந்த முன்மொழிவு வரைவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் குழுவில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், ஜெலன்ஸ்கி அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இது தனக்கு சற்று ஏமாற்றத்தை அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்யாவுக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை என்று தாம் நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர்தான் பேச்சை தாமதப்படுத்தி வருகிறார் என, டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி திட்டம் குறித்து, ஐரோப்பிய நாடுகள் லண்டனில் கூடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top