மியன்மாரின் சகாயிங் மாகாணத்திலுள்ள தேனீர்கடையொன்றின் மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் மியன்மாரில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ள சூழலில், ஆயுதமேந்திய ஜனநாயக சார்புப் படைகளை குறிவைத்து வான்வழி உள்ளிட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021 இல் மக்களால் தேர்நெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சி நடத்தி வருகின்றது. இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், மியன்மார் இராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இடம்பெறுகின்றது.

இந்நிலையில், சகாயிங் மாகாணத்தின் மாயகன் கிராமத்தில் இருந்த தேனீர்கடையின் மீது மியன்மார் இராணுவம் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
மியன்மார் – பிலிப்பைன்ஸ் இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியைக் காண்பதற்காகத் திரண்டிருந்த சிறுவர்கள் உட்பட 18 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 25 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
