காசாவில் எஞ்சி உள்ள இரு உயிரிழந்த பணயக்கைதிகளில் ஒரு பணயக்கைதியினது என கூறி ஹாமஸ் இஸ்ரேல் இடம் ஒப்படைத்த உடல் பணயக்கைதிக்கு உரியதல்ல என இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்த உடலை தடயவியல் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நேற்று (03) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காசாவில் எட்டப்பட்ட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான பலவீனமான போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் போராளிகள் உயிருடன் இருந்த 20 பணயக்கைதிகள் உட்பட அனைத்து 48 பணயக்கைதிகளையும் விடுவிக்க இணங்கியது.
இதில் இஸ்ராயிலி ரான் கிவிலி மற்றும் தாய்லாந்து நாட்டவரான சுத்திசாக் ரின்தலாக் ஆகியோரின் உடல்கள் மாத்திரம் இன்னும் விடுவிக்கப்படவிருந்தது. எனினும் இந்த உடல்களை விடுவிப்பதில் ஹமாஸ் வேண்டுமென்று தாமதம் காண்பிப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
எனினும் இரண்டு ஆண்டுகள் நீடித்த போரில் இந்த உடல்கள் பாரிய அளவான இடிபாடுகளில் சிக்கி இருக்கும் சூழலில் அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட பணயக்கைதியின் உடல் எனக் கூறிய சடலம் அடங்கிய சவப்பெட்டி பொலிஸ் பாதுகாப்புடன் தடயவியல் மருத்துவ மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேல் முன்னதாக வெளியிட்ட சுருக்கமான அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த உடல் டெல் அவிவில் இருக்கும் குறித்த தடயவியல் நிறுவனத்தை சென்றடைந்திருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எனினும் அந்த உடலை சோதித்த பின்னரே இஸ்ரேல் அது பணயக்கைதி உடையது அல்ல என்று முடிவுக்கு வந்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த உடல் செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேலிடம் கிடைத்தது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
காசாவில் போர் வெடிப்பதற்கு காரணமாக இருந்து 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீனர் போராளிகள் நடத்திய தாக்குதலின்போதே 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை காசாவில் 70,117 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்திருப்பதோடு இந்தத் தகவல் நம்பகமானது என ஐ.நா. நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
குறிப்பாக கடந்த ஒக்டோர் 10 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு இந்த காலப்பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 360 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 13 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சிய பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு மற்றும் காசாவில் இயங்கும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து காசாவின் பல இடங்களிலும் தேடுதலில் ஈடுபட்டு வருவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் காசாவில் குறிப்பாக வடக்கு பகுதியின் ஜபலியா மற்றும் பெயித் லஹியாவில் தீவிர தேடுதலில் ஈடுபட்டது. ”பல உடல்களும் இடிபாடுகளுக்கு கீழ் நடத்திய சோதனைகளில் கண்டுபிக்கப்பட்டன’ என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, தேடுதல் நடவடிக்கைள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ‘கண்டுபிடிக்கப்பட்ட இந்த உடல்கள் எதுவும் இஸ்ரேலிய கைதியுடையது என்பதற்கு எந்த உறுதிப்படுத்தலும் இல்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘எஞ்சிய பணயக்கைதிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் அவை தற்போது உள்ள பொறிமுறைகளை பயன்படுத்தி இஸ்ரேலிடம் கையளிக்கப்படும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கைகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் காசாவுக்கான உதவிகள் செல்வதிலும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் காசாவில் தொடர்ந்தும் மனிதாபிமான நெருக்கடி நீடித்து வருகிறது.
எவ்வாறாயினும் காசாவுடனான எகிப்தின் பிரதான எல்லைக்கடவையாக இருக்கும் ரபா வாயில் அடுத்த சில நாட்களில் திறக்கப்படும் என இஸ்ரேல் நேற்று அறிவித்திருந்தது.
உடன்டிக்கையின் முதல் கட்டத்தில் பலஸ்தீன போராளிகள் உயிருடன் இருந்த 20 பணயக்கைதிகளையும் விடுவித்ததோடு உயிரிழந்த 28 பணயக்கைதிகளில் 26 உடல்களை கையளித்துள்ளது. இதற்கு பகரமாக சுமார் 2000 பலஸ்தீன கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுவித்திருந்தது. இதன்போது நூற்றுக்கணக்கான உயிரிழந்த பலஸ்தீனர்களின் உடல்களையும் இஸ்ரேல் கையளித்தது. இந்த போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவுடன் எகிப்து மற்றும் கட்டாரும் மத்தியஸ்தம் வகிக்கின்றன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அமைதி உடன்படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் முன்வரும் என்று இந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. ‘மிக விரைவில் இரண்டாம் கட்டத்திற்கு இரு தரப்பையும் தள்ள வேண்டும் என நாம் நினைக்கிறோம்’ என்று கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி தெரிவித்துள்ளார்.
