இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்திலேயே இத் தீவிபத்து நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் அறைகளுக்குள் காணப்பட்டதாக நகர தீயணைப்பு மற்றும் மீட்பு நிறுவனத் தலைவர் ஜிம்மி ரோட்டின்சுலு தெரிவித்துள்ளார் . அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தீ விபத்து குறித்து அருகில் வசிப்பவர்கள் அவசர சேவைகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆறு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பங்களின் உதவியுடன் அடையாளம் காண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தீ விபத்துக்கு மின் கசிவு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
