ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவோருக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க திட்டமிட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் கடற்படையை ஈரானை நோக்கி டிரம்ப் அனுப்பி உள்ளார். இதனால் மத்திய கிழக்கில் கடுமையான போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த பதற்றத்தை தணிக்க துருக்கி முன்வந்துள்ளது. எனவே அந்த நாட்டுக்கு ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி நேற்று சென்றிருந்தார். அங்கே துருக்கி அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘நேர்மையான மற்றும் சமநிலையான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். போருக்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் பேச்சுவார்த்தைக்கான வடிவம், இடம் மற்றும் அம்சங்கள் பொறுத்தே அதற்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்’ என தெரிவித்தார்.
அதேநேரம் அமெரிக்கர்களை பேச்சுவார்த்தைக்காக சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
அப்போது துருக்கி வெளியுறவு மந்திரி ஹகன் பிடன் கூறுகையில், ‘பிரச்சினைகளைத் தீர்க்க ராணுவ நடவடிக்கையை நாடுவதை நாங்கள் எதிர்க்கிறோம், அது பயன் தராது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை மட்டுமே நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்ற தெரிவித்தார்.
