News

அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்

 

 

ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

சிலர் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் தனது வழக்கமான பாணியில் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கொடூரமாக சுட்டுக் கொன்றால், போராட்டக்காரர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பதற்கு தயாராக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறுகையில், “ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது பிராந்திய அளவில் குழப்பத்தை விளைவிக்கும். அமெரிக்க நலன்கள் சிதைக்கப்படும். டிரம்ப் ஆபத்தான விளையாட்டை தொடங்கியுள்ளார். அமெரிக்க மக்கள் தங்கள் வீரர்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என சாடினார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், “அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் உருவாகியுள்ளது.

கடந்த 2025 ஜூனில், ஈரானின் அணு மின்சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top