சுமார் அரை மில்லியன் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்க ஸ்பெயின் நாடு முடிவு செய்ததை அடுத்து, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஆண்கள் கூட்டம் அலை மோதியுள்ளது.
இந்தத் திட்டமானது, குற்றப் பதிவு இல்லை என்பதை நிரூபிக்கக்கூடிய அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கும். மேலும் 2026 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பு குறைந்தது ஐந்து மாதங்களாவது ஸ்பெயினில் வசித்திருக்க வேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்டதும், புலம்பெயர்ந்தோர் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மேலும் ஒரு வருட வதிவிட அனுமதி வழங்கப்படும், இது நீட்டிக்கப்படலாம்.
ஆனால் இந்த விவகாரம் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கை கடும் கோபத்தில் தள்ளியுள்ளது. ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez தனது அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தீவிர வலதுசாரிகளை தோற்கடிப்பது என்ற போர்வையில் அப்பட்டமான தேர்தல் நாடகம் இதுவென்றும் மஸ்க் சாடியுள்ளார். அரை மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் ஊடாக புதிதாக தமக்கு சாதகமான வாக்காளர்களை புத்திசாலித்தனமாக இணைத்துள்ளதாக மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் மஸ்கின் கோபத்திற்கு பதிலளித்துள்ள ஸ்பெயின் பிரதமர், செவ்வாய் காத்திருக்கும், ஆனால் மனிதகுலத்தால் முடியாது என்றார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் மெகா திட்டம் ஒன்றை எலோன் மஸ்க் முன்னெடுத்து வருகிறார் என்பதாலையே, ஸ்பெயின் பிரதமர் அவ்வாறு பதிலளித்துள்ளார்.
அரை மில்லியன் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதன் நோக்கம், தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்கவும் தேவையான நடவடிக்கை இதுவென ஸ்பெயின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் பிரதமரின் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள, பார்சிலோனாவின் எக்சாம்பிளில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆண்கள் வரிசையில் நின்று, தங்களுக்கு எந்த குற்றப் பதிவுகளும் இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ்களைப் பெற்றனர்.
இந்த நிலையில், நமது நாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றே புலம்பெயர் அமைச்சர் Elma Saiz தெரிவித்துள்ளார். ஆனால் தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சி இந்த நடவடிக்கையால் கோபமடைந்துள்ளது.
உண்மையான ஸ்பெயின் மக்களை வெறுக்கும் ஒரு பிரதமரால் மட்டுமே இப்படியான ஒரு திட்டத்தினை செயல்படுத்த முடியும் என்று வோக்ஸ் கட்சியின் தலைவர் Santiago Abascal குற்றஞ்சாட்டியுள்ளார்.
