மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சித் தலைவருமான அஜித் பவார் (Ajit Pawar), பாராமதியில் (Baramati) இன்று (28) காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மும்பையிலிருந்து பாராமதி நோக்கிச் சென்ற விசேட விமானம் (Chartered Aircraft) தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று (28) காலை 8.45 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இக்கோர விபத்து பதிவாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் பல துண்டுகளாகச் சிதறி உடைந்துள்ளதை சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.
விமானப் போக்குவரத்து இயக்க பணியகம் (DGCA) வழங்கிய தகவலின்படி, இந்த விபத்தில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வர் அஜித் பவார், விமான பணியாளர்கள் (Staff members) 02, விமானக் குழுவினர் (Crew) 02, மற்றுமொருவர் உள்ளிட்ட மொத்தமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அஜித் பவார் பாராமதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்து விரிவான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
