News

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்ட உயிரிழப்பு 36ஆக அதிகரிப்பு

 

மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28-ம் தேதி தொடங்கிய போராட்டம், 22 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவி உள்ளது. ஆங்காங்கே அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. போராட்டத்தை தடுக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர்.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் பொருளாதார சீரழிவு, அதன் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக அவதிப்படும் நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது அரசு தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தினால், அவர்களை மீட்க அமெரிக்கா களமிறங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, ஈரானின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top