News

ஈரானில் கனேடியப் பிரஜை உயிரிழப்பு : கேள்விக்குறியாகும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பு

ஈரானிய அதிகாரிகளினால் கனேடியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகக் கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த்,  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், உயிரிழந்தவர் யார் அல்லது எப்போது இச்சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்த மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

ஈரானிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.

மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக, ஈரான் அரசு மனித உயிர்களைத் துச்சமாக மதித்துச் செயற்படுவதாக அனிதா ஆனந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியே கனடா இந்தத் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது அங்கு வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பு குறித்துச் சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top