News

ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்; 500 பேர் வரை பலி – இதுவரை 10,600 பேர் கைது

 

 

ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கடமையில் ஈட்டுபட்டுள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சில அரச ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரானில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் வரை பலியானதாக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்ள்ளது.

அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10,600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சூழலில், ஈரானின் சட்டமா அதிபர் மொஹமட் மொவாஹிதி அசாத் அரச தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என அவர் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ஈரானின் பதற்ற நிலைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், வத்திக்கானில் போப் லியோ இறை வணக்க நிகழ்ச்சிக்கு பின்னர் கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஈரான் மற்றும் சிரியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான பதற்ற நிலையால், மக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

அவர்களுடன் என்னுடைய எண்ணங்கள் உள்ளன. ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். அதற்காக வேண்டி கொள்கிறேன் என்றார்.

இதேபோன்று, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் கூறும்போது, வன்முறையை தவிர்க்க வேண்டும் என ஈரானிய அதிகாரிகளை வலியுறுத்தினார்.

அயர்லாந்து, இஸ்ரேல் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களும் ஈரான் சூழல் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top