News

ஈரானில் நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி – 10 நாட்களில் வெடித்துள்ள போராட்டம்

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 10 நாட்களில், ஈரானின் 31 மாகாணங்களில் 17இற்கும் மேற்பட்ட மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

ஈரானிய நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக மிகக் கடுமையாக சரிந்ததால், கடந்த டிசம்பர் 28ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானில் போராட்டம் தொடங்கியது.

தற்போது 50இற்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானில் நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி - 10 நாட்களில் வெடித்துள்ள போராட்டம் | Major Nationwide Uprising In Iran

பொதுவாக அரசுக்கு மிகவும் விசுவாசமாக கருதப்படும் ‘கோம்’ (Qom) மற்றும் ‘மஷ்ஹாத்’ (Mashhad) போன்ற நகரங்களிலும் மக்கள் வீதியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் நிதானமாக இருந்த பாதுகாப்புப் படையினர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி “கலவரக்காரர்கள் ஒடுக்கப்பட வேண்டும்” என்று கூறிய பிறகு, துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி மூலம் போராட்டத்தை ஒடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகளின் தகவல்படி, இதுவரை குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைகளை நோக்கிச் சுடுவதும், போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களுக்குத் தீ வைப்பதும் போன்ற அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் 1,200இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆரம்பத்தில் விலையேற்றத்திற்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது அரசியல் மாற்றத்தை நோக்கித் திரும்பியுள்ளது. உச்ச தலைவர் காமேனிக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

அத்துடன் 1979 புரட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த மன்னர் குடும்பத்திற்கு ஆதரவாகவும் சில இடங்களில் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

ஈரான் அரசு ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சர்வதேச பொருளாதாரத் தடைகள் ஈரானின் முதுகெலும்பை உடைத்துள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மஹ்சா அமினி’ போராட்டத்திற்குப் பிறகு அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top