News

ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு

 

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் பல இடங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் இந்த மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன.

நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்ரோல் விலை மாற்றம் ஆகியவையே தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் ஈரானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல பகுதிகளில் இணைய சேவையையும் துண்டித்துள்ளது.

இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இதுவரை 6,126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனம் செலுத்தி வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top