News

ஐரோப்பாவை தாக்கியுள்ள கடும் குளிர் : 6 பேர் பலி

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிர், பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக இதுவரை குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் வானிலை சூழல் காரணமாக வீதி, தொடருந்து மற்றும் விமானப் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியான லாண்டஸ் பகுதியில், ஏற்பட்ட வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், பாரிஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

பாரிஸ் நகரின் கூரைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் முழுவதும் பனியால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன.

கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பிரான்ஸின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ஆறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

போஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா நாட்டின் தலைநகர் சரயேவோவில், பனியால் மூடப்பட்ட மரத்தின் கிளை தலை மீது விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

நகரம் முழுவதும் பனிப்பொழிவு பரவலாக காணப்படுகிறது. நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிப்போல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஓடுபாதைகளை சுத்தம் செய்வதும், விமானங்களில் உறைபனியை அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் உள்நாட்டு தொடருந்து சேவைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதன் விளைவாக, ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸுக்கான யுரோஸ்டார் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவோ அல்லது தாமதமாகவோ இயக்கப்பட்டன.

ஜெர்மனியின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வெப்பநிலை மறை பத்து பாகை செல்சியற்கு கீழ் சரிந்துள்ளது. இங்கிலாந்தில், இரவு நேரத்தில் வெப்பநிலை மறை 12.5 பாகை செல்சியஸ் வரை குறைந்தது.

இதனால் தொடருந்து, சாலை, விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன், வடக்கு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top