சிரியாவின் பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்கர் என 3 பேர் பலியானார்கள்.
சிரியாவில் 2024-ம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், நடந்து வரும் அரசானது, அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பல்மைரா நகரில் கடந்த மாதம் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க குடிமகன் ஒருவர் என 3 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
அமெரிக்க வீரர்களான எட்கர் பிரையன் டோரஸ்-தோவர், வில்லியம் நதானியேல் ஹோவர்ட் மற்றும் அயாத் மன்சூர் சகாத் என 3 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதி நிலைகளை குறி வைத்து கூட்டணி படைகளுடன் சேர்ந்து பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எங்களுடைய போர் வீரர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினால், உலகின் எந்த மூலையில் நீங்கள் பதுங்கினாலும், உங்களை கண்டறிந்து கொல்வோம் என்பதே எங்களுடைய வலிமையான செய்தி என தெரிவித்து உள்ளது.
அதற்கு முன்தினம் ஐ.எஸ். இயக்கத்தின் ராணுவ தலைவரை கைது செய்து விட்டோம் என சிரிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
