News

சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

 

 

மியான்மரின் வடக்குப் பகுதியில் பாரிய இணைய மோசடிகள், ஆள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘மிங்’ (Ming) குடும்பத்தைச் சேர்ந்த 11 முக்கிய உறுப்பினர்களுக்கு சீனா இன்று (29) மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

குறித்த நபர்கள் வடக்கு மியான்மரின் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரின் கோகாங் (Kokang) பகுதியைத் தளமாகக் கொண்டு இயங்கிய இந்த ‘மிங்’ குடும்பத்தினர், 2015ஆம் ஆண்டு முதல் ஒரு பாரிய குற்ற கும்பலை செயற்படுத்தி வந்த இவர்கள் “Crouching Tiger Villa” போன்ற பாரிய முகாம்களை அமைத்து, ஆயிரக்கணக்கான மக்களைக் கடத்தி வந்து கட்டாயப்படுத்தி இணைய மோசடிகளில் (Cyber Scams) ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2025 செப்டெம்பரில் சீனாவின் செஜியாங் (Zhejiang) மாகாண நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் (10 பில்லியன் சீன யுவான்) மதிப்பிலான நிதி மோசடிகளில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தப்பிச்செல்ல முயன்ற தொழிலாளர்கள் உட்பட 14 பேரைக் கொடூரமாகக் கொலை செய்தமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை. வெளிநாடுகளில் இருந்து வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களைக் கடத்தி வந்து அடிமைகளாக வைத்து, இணையத்தில் மோசடியாக பணம் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தமை அம்பலமாகியிருந்தது.

இக்கும்பல் மற்றும் மியான்மரின் ஏனைய குற்றக் குழுக்களால் கடந்த காலங்களில் பல இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளம் தருவதாகக் கூறி மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 இலங்கையர்கள் கடந்த காலங்களில் பெரும் முயற்சியின் மத்தியில் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக சம்பளத்துடன் கூடிய கணினி வேலைகள் பெற்றுத் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top