தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன் வரவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று(06.01.2026) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள்.
ஆனால், அவர்கள் மீது பொலிஸார் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

பௌத்த துறவி ஒருவரை இவ்வாறு கைது செய்ய முடியுமா. நீங்கள் இந்து ஆலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களை இடித்து அழிக்கின்றீர்கள்.
அப்படியானால் வலுக்கட்டாயமாகக் கட்டப்பட்ட புத்த விகாரையை இடிக்க முடியாதா. வடக்கு, கிழக்கில் இராணுவம் இன்றளவிலும் குவிக்கப்பட்டுள்ளது.
இதனை மாற்றுங்கள். தமிழர்களுக்கு நீதியையும், நியாயமான தீர்வையும் வழங்க முன்வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டில் நிமலராஜன், சிவராம், சுகிர்தராஜன் என ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் கொலைக்குக் காரணமானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை, நீதி கிடைக்கவில்லை என்றும் சபையில் உரையாற்றும்போது சிறீதரன் மேலும் குறிப்பிட்டார்.
